இராமநாதபுரம் மாவட்டம் – அதிகரிக்கும் தங்கக் கடத்தல், ஏன், எதற்கு, யாரால்?

இந்தியாவில் ஆண்டுக்கு 1000 டன் தங்கம் ஆபரணங்களாகவும், கட்டிகளாகவும், தங்க காயின்களாகவும் பயன்பாட்டில் இருப்பதாக நிதித்துறை அமைசகத்தின் தகவல் சொல்கிறது. உலகளவில் தங்கத்தின் பயன்பாடு சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் முறையாக வரிசெலுத்தி இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஒருபுறம் எனில் முறையற்ற வகையில் கடத்தல் தங்கமாக ஆண்டுக்கு 200 டன் வரை இந்திய நாட்டிற்குள் கொண்டுவரப்படுகிறது என்ற தகவலும் சொல்லப்படுகிறது.

ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில் கடத்தல் தங்கம் இந்தியாவில் வழக்குகளாக பதியப்படுவதில் ( 2012 ஆம் ஆண்டு முதல் ஜீன் 2022 வரையிலான காலகட்டங்களில் ) சராசரியாக ஆண்டுக்கு தமிழகத்தில் 722 தங்க கடத்தல் வழக்குகளும், மகாராஷ்ட்ராவில் 705 மற்றும் கேரளாவில் 295 வழக்குகளாகவும் உள்ளன.

அந்த வகையில் விமானம் மூலம், குருவிகள் மூலமாக தங்கம் கடத்தப்படுவது சென்னை, திருச்சி விமான நிலையங்களில் பிடிபடுவதை வைத்து எந்தளவிற்கு அன்றாட நிகழ்வாக ஆகி இருக்கிறது என்பதை நம்மால் கணக்கிட முடியும்.

சமீப காலமாக தமிழகத்தின் எல்லையோர கடற்கரை மாவட்டமான இராமநாதபுரத்தில் கடல்மார்க்கமாக கடத்தப்படும் தங்கம் சில நேரங்களில் கடலோர பாதுகாப்பு  படையினரின் ரோந்து மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் கண்டறியப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் இதற்கு பின்னால் உள்ள கடத்தல் கும்பலின் தலைவர்களையோ, யாருக்காக கடத்தப்படுகிறது என்ற உண்மையையோ இப்போது வரை கண்டறியப்பட முடியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இராமநாதபுரம் கீழக்கரை 19 வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ் அவரது சகோதரர் முன்னாள் திமுக கவுன்சிலர் ஜெய்னுதீன் ஆகியோருக்குச் சொந்தமான சொகுசு கார் இராமநாதபுரம் – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் தடுப்பு சோதனையையும் மீறி வேகமாகச் சென்றதை விரட்டிச் சென்று பிடித்து காரை சோதனை செய்த போது 30க்கும் மேற்பட்ட 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் கேன்களில் வித்தியசமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இந்த மூலப்பொருட்களை ( வெடிகுண்டு அல்லது போதைப் பொருள் செய்வதற்கான ) இலங்கைக்கு வேதாளை கிராமத்தைச் சேர்ந்த சாதிக் அலி படகின் மூலம் கடத்த திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. முதலில், அதைப் போதைப் பொருள், வெடிப் பொருள் என்று அறிவித்த காவல்த்துறையே அடுத்தடுத்த விசாரணைகளில் அது விவசாய உரம் என்று கூறிவிட்டது மர்மத்தை அதிகரித்தது!

அடுத்த மாதத்திலேயே, அதாவது டிசம்பர் 2022 ல் வருவாய் புலனாய்வு துறைக்கு இராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வரும் பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த துப்பு அடிப்படையில் செய்த சோதனையின் மூலம் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரிடமிருந்து 5 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த கடத்தலுக்கு பின்புலமாக இருந்தது அவரது தம்பி மரக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

2023 ஆண்டு பிப்ரவரியில் தனுஷ்கோடி மண்டபம் நோக்கி வந்த அதிக திறன் கொண்ட படகில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு துறை ரேடார் மூலம் கண்டறிந்து படகை சுற்றி வளைத்தனர். அதற்குள் மூட்டைகளை கடலில் வீசிய கடத்தல்காரர்களை கடலோர காவல்படை கைது செய்து விசாரணை செய்தபோது மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான்,அன்வர் அலி மற்றும் மன்சூர் அலி இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். 2 நாட்களாக கடலோர காவற்படையின் தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்கூபா டைவிங் வீரர்களை வைத்து முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளித்தலில் ஈடுபடும் ஆட்களை வைத்து ஆழ்கடலில் தேடிய போது 17.74 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10.5 கோடி என்று சொல்லப்படுகிறது.

கடந்த மே மாதம் 23 ஆம் தேதியில் இராமநாதபுரம் வேதாளையில் படகில் வந்த சந்தேகத்திற்குரிய நபர்களை சுற்றி வளைத்த போது அவர்கள் கடல்வழியாக கடத்தி வந்த தங்கத்தை கடலில் வீசி எறிந்ததாக விசாரணையில் முகமது நாசர், அப்துல் ஹமீது மர்றும் ரவி ஆகியோர் தெரிவித்தனர். பிறகு ஆழ்கடலில் தேடுதல் வேட்டையை தொடர்ந்த கடலோர காவல் படை 32 கிலோ தங்கம் இருந்த மூட்டைகளை கண்டறிந்தனர்.

எங்கிருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது ? இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியும். இந்த விசாரணையே முழுமை பெறாத நிலையில் தற்போது நொச்சியூரணி அருகே வேகமாக வந்து பாறையில் மோதி நின்ற படகை கரைக்கு கொண்டு வந்து சோதனை செய்ததில் 5 கிலோ அளவில் தங்கம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. படகில் வந்த கடத்தல்காரர்கள் அருகில் உள்ள தோப்பின் வழியாக தப்பிச் சென்றனர் என்று கடலோர காவல்படை தெரிவிக்கிறது.

இப்படி தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதி போதை, வெடிப்பொருட்கள், தங்கக் கடத்தல் மையமாக மாறி வருவது வெளிப்படையாக தெரிகிறது! இது இந்திய பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடும். கடனில் மூழ்கியுள்ள இலங்கையோ அந்நாட்டில் கடலோரப் பகுதிகளை சீனா பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது. எனவே தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் கூடுதல் கடலோர காவல்படையை அமைத்து தொடர்ந்து ரோந்துப்பணிகள் மூலம் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.அதிகரித்துவரும் கடத்தல் ஏன், எதற்கு, யாரால் என்பது புலன் விசாரணை செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் பிரிவினைவாத குழுக்கள் இந்த திராவிட மாடல் அரசு வந்ததிலிருந்து மீண்டும் துளிர்விடும் வேளையில் மத்திய உள்துறை அமைச்சகம் மிக அவசரமான, அவசியமான கண்காணிப்பு வளையத்தில் தமிழக கடற்கரையோரங்களை கொண்டு வருவது காலத்தின் தேவை.

– ராஜேஷ் ராவ் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top