தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல்

திராவிட மாடலின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திராவிட மாடலின் ஏமாற்று வேலைகளை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் மொத்த வருவாய் செலவீனங்கள் 2,84,188 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2022-23ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் மொத்த வருவாய் செலவீனங்கள் 2,76,135 கோடி ரூபாய் மட்டுமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சென்ற ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் வருவாய் பற்றாக்குறையை முன்பை விட குறைத்து விட்டோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கல்வி கடன் ரத்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2, டீசல் லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், சாத்தியமே இல்லாத பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மகளிருக்கு உரிமை தொகை, 70% மேற்பட்டோருக்கு வழங்கப்படாத நகைக்கடன் ரத்து, 3.5 லட்ச பேருக்கு அரசு வேலைவாய்ப்பு, 1000 கோடி ரூபாய் செலவில் கோவில்கள் புனரமைப்பு, புதிதாக 500 கலைஞர் உணவகம் அமைக்கப்படும் போன்ற முக்கிய வாக்குறுதிகள் எவற்றையும் சென்ற ஆண்டு நிறைவேற்றாமல், ‘வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது’ என்று எப்படி சொல்ல முடியும் ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என்று மக்களை வருத்தி வருவாய் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று மார்தட்டிக்கொள்வதா? எனவும் சாடியுள்ளார். மேலும் இந்த வருடம் வருவாய் பற்றாக்குறை குறைவதற்கு முக்கிய காரணி டார்கெட் வைத்து செயல்படும் சாராய அமைச்சர் தான் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ரூ. 36,013 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை ஓரே ஆண்டில் 45,000 கோடிக்கு எடுத்து சென்றதோடு அடுத்த நிதி ஆண்டில் 50,000 கோடி வசூலித்து தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top