பத்து  மாதங்களில், மூன்று  முறை  ஆவினில் விலையை ஏற்றும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

பத்து மாதங்களில், மூன்று  முறைக்கு மேல் ஆவினில் பால் பொருட்களின் விலையை திறனற்ற திமுக அரசு ஏற்றி உள்ளது என பாஜக மாநில தலைவர் கண்டம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் இன்று (03.02.2023)  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:  தமிழக அரசு நிறுவனங்களைச் செயலிழக்க வைத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் போக்கு, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே படிப்படியாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆவின் பால் பொருள்களின் விலையை, எளிய மக்கள் பாதிப்படையும்படி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது திறனற்ற திமுக அரசு.

கடந்த பத்து மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருள்களின் விலையை உயர்த்தி, பொதுமக்கள் வயிற்றில் அடித்த திறனற்ற திமுக அரசு, தற்போது, புதுவிதமான விலை உயர்வைக் கொண்டு வந்திருக்கிறது. ஆவின் பச்சைநிற பால் வகையில் கொழுப்புச் சத்து அளவை 4.5% லிருந்து, 3.5% ஆகக் குறைத்திருக்கிறது தமிழக அரசு மேலும் முகவர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்ததன் மூலம், 2 ரூபாய் அளவில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு, ஆவின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தியும், பின்னர் இதர பால் விலைகளை உயர்த்தியும், ஆவின் வெண்ணை விலை லிட்டருக்கு 20 ரூபாயும், நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாயும் அதிகமாக உயர்த்தி, எளிய மக்களுக்கு மேலும் பொருள் சுமையை ஏற்றிய திமுக அரசு, தற்போது மீண்டும் புதிய முறையிலான விலை உயர்வைக் கொண்டு வருவதில் முனைப்பாக இருக்கிறது. இதன் மூலம், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தை முடக்கி, தங்களுக்கு வேண்டிய தனியார் நிறுவனங்கள் பயன்பெறுமாறு வழி செய்யும் நோக்கம் இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.

ஆரஞ்சு நிற பால் வகையின் விலையை ஏற்றியதனால் பச்சை நிற பால் வகைக்கு மாறிய மக்களை வஞ்சிக்கும் வகையில் பச்சை நிற பால் வகையின் விற்பனையை முதலில் குறைத்தார்கள். தற்போது, பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்தை குறைத்து, ஆரஞ்சு நிற பால் வகையை மக்களின் மேல் கட்டாயப்படுத்தும் முயற்சியாகவே இது வெளிப்படுகிறது.

கடந்த ஆண்டு பால் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டிதான் காரணம் என்று. கூசாமல் பொய் சொன்னார் பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள். ஆட்சிக்கு வந்தபின் 25% விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தியிருக்கும் திறனற்ற திமுக அரசு, இன்னுமொரு விலை உயர்வைத் தாங்கும் நிலையில் பொதுமக்கள் இல்லை என்பதை உணர வேண்டும்.

உடனடியாக, தற்போது கொண்டு வந்திருக்கும் மறைமுக விலை உயர்வைக் கைவிட்டு, எளிய மக்களுக்கான ஆவின் நிறுவனத்தை, அவர்கள் பயன்படும்படி நடத்த வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

படிக்க நேரமில்லையா? சொடுக்கி ஒலி வடிவில் கேளுங்களேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top